வட்டியில்லா நகைக் கடன் வழங்குவதாக கூறி ஏராளமானவர்களை ஏமாற்றிய 5 பேரை போலீஸ் பிடித்து இருக்கிறது.
சென்னை மேற்கு மாம்பலத்தில் ரூபி ராயல் ஜுவல்லர்ஸ் மற்றும் பேங்கர்ஸ் என்ற நிறுவனம் இயங்கி வந்தது. இங்கு இஸ்லாமியர்களுக்கு மட்டும் வட்டி இல்லா நகைக்கடன் வழங்கப்படும் என சலுகை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை நம்பி, ஏராளமானவர்கள், தங்களது நகைகளை ரூபி ஜுவல்லர்ஸ் நிறுவனத்தில் அடகு வைத்து 10 ஆண்டுகளாக பணம் பெற்று வந்தனர். இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை, ரூபி ஜூவல்லர்ஸ் நிறுவனத்தினர் வேறு வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களில் மறு அடகு வைத்து பணம் வாங்கியுள்ளனர். பின்னர் 2019ல் நிறுவனத்தை மூடிவிட்டு, 34 கோடி ரூபாய் மதிப்பிலான 500 கிலோ நகைகளுடன் தலைமறைவாகிட்டனர்.
இழந்த நகைகளை மீட்டுத்தரக் கோரி, வியாசர்பாடியைச் சேர்ந்த உமர் அலி என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்திருந்தார். . இதனையடுத்து, மோசடி பேர்வழிகளை பிடிக்க, கூடுதல் டி.ஜி.பி, ஐ.ஜி மட்டத்திலான அதிகாரிகள் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு ரூபி ராயல் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள் சையது ரகுமான், அனிசூர் ரகுமான் மற்றும் ஊழியர்கள் ரிகானா, சஜிதா, ஷஹீனா ஆகிய 5 பேரை கைது செய்துள்ளனர். சிறையில் அடைக்கப்பட்ட அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி, நகைகளை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.