
பள்ளி வாகனம் மோதி உயிரிழந்த மாணவன் தீக்ஷித்தின் உடல் உடற்கூராய்வுக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சிறுவன் தீக்ஷித் (7) ஆழ்வார்திருநகரிலுள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். மறந்து வைத்துவிட்ட மதிய உணவுக் கூடையை எடுப்பதற்காக பள்ளி வாகனத்தில் ஏற முயற்சித்துபோது ஏற்பட்ட விபத்தில் தீக்ஷித் படுகாயமடைந்துள்ளார்.
இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே சிறுவனின் உயிர் பிரிந்தது. இதுதொடர்பாக சிறுவனின் தாயார் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில், பள்ளி வாகன ஓட்டுநர் பூங்காவனம் (64), வேன் உதவியாளர் ஞானசக்தி, பள்ளி தாளார் ஜெயசுபாஷ், முதல்வர் தனலட்சுமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது பள்ளி வாகன ஓட்டுநர் பூங்காவனம், வேன் உதவியாளர் ஞானசக்தி கைது செய்யப்பட்டுள்ளனர். ராயப்பேட்டை மருத்துவமனையில் சிறுவனின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு பெற்றோரிடத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையில் வாகன ஓட்டுநர் பூங்காவனத்துக்கு செவித்திறன் குறைபாடு இருப்பது தெரியவந்துள்ளது.
64 வயதானவருக்கு ஓய்வு தராமல் பணி அமர்த்தியது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பள்ளி வாகன பாதுகாப்பு தொடர்பான கட்டுப்பாடுகளை தீவரப்படுத்துவது தொடர்பாக சென்னையில் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை மேற்கொண்டது.
