கைலாசா பெண்களை திருமணம் செய்து கொடுங்கள் அதிபரே..90ஸ் கிட்ஸ் கோரிக்கை

கைலாசா நாட்டு பெண்களை திருமணம் செய்து வைக்குமாறு நித்யானந்தாவுக்கு, 90ஸ் கிட்ஸ் எழுதியுள்ள கடிதம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

ஒரே ஒரு வீடியோவால் தமிழகம் முழுவதும் அதிகம் பிரபலமாகிய நித்யானந்தா, பல்வேறு வழக்குகள் மற்றும் சர்ச்சைக்கு ஆளாகி, தற்போது எங்கு இருக்கிறார் என்றே தெரியாமல் தலைமறைவாகி உள்ளார்.

அதேசமயம், இந்துக்களுக்காக கைலாசா எனும் தனி நாட்டை உருவாக்கியுள்ளதாகவும், தமிழர்களுக்கு அதில் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், அவ்வப்போது வீடியோ வெளியிட்டு வருகிறார்.

கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று நித்தியானந்தா, கைலாசா நாட்டின் தங்க நாணயங்களை வெளியிட்டார். அத்துடன் ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா என்ற வங்கியையும் தொடங்கி, 300 பக்கங்கள் கொண்ட பொருளாதார கொள்கையையும் வெளியிட்டு பலரையும் ஆச்சரியப்படுத்தினார்.

இதையடுத்து, மதுரையை சேர்ந்த தனியார் ஓட்டல் நிறுவனர் ஒருவர், கைலாசாவில் ஹோட்டல் தொடங்க அனுமதி கேட்டிருந்தார். அதுமட்டுமல்ல திருச்சியில் உள்ள சாரதாஸ் துணிக் கடையும் அங்கு கடை அமைக்கவும், கைலாசாவில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும் பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன.

இந்த நிலையில் திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் மனஉளைச்சலில் உள்ள தங்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று, நித்யானந்தாவுக்கு 1990-களில் பிறந்த 90ஸ் கிட்கள் கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளனர்.

திருமண வேண்டுகோள் என்று தலைப்பிடப்பட்டுள்ள அந்த கடிதத்தில், அனுப்புனர் 1990-ம் ஆண்டு பிறந்தவர்கள், தமிழ்நாடு என்றும், பெறுநர் முகவரியில் சுவாமி நித்தியானந்தா, கைலாசா நாட்டு அதிபர், கைலாசா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த கடிதத்தில் சுவாமி, 1990-ம் ஆண்டு முதல் பிறந்த நாங்கள், தற்போது பல ஆண்டுகளாக திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் தவித்து வருகிறோம்.

எங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு பின் பிறந்த 2000ம் ஆண்டு கிட்ஸ்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. இதனால் நாங்கள் பெரும் மன உளைச்சலில் உள்ளோம். தயவுசெய்து உங்கள் ஆசிரமத்தில் இருக்கும் பெண்களை எங்களுக்கு திருமணம் செய்து கொடுத்து, கைலாசா நாட்டில் ஒரு குடியிருப்புடன், அரசாங்க வேலை கொடுத்து, எங்கள் மனக்கவலையை தீர்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என்றும், இப்படிக்கு மிகுந்த எதிர்பார்ப்புடன் தங்கள் சிஷ்யன்கள் 1990-ம் ஆண்டு பிறந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version