வடசென்னையை சேர்ந்த பிரபல ரவுடியான கல்வெட்டு ரவி, பாஜகவில் இணைந்து இருப்பது அக்கட்டையினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த தேர்தலில் நோட்டாவுடன் மோதிக்கொண்டிருந்த பாஜக அடுத்த தேர்தலில் எப்படியும் டெபாசிட்டை பிடித்து விட வேண்டும் என தீவிரமாக களப்பணி ஆற்றி வருகிறது. அதன் கரணமாகவே, 2021ம் ஆண்டு தேர்தலை கருத்தில் கொண்டு யாராக இருந்தாலும் பராவாயில்லை என தனது கட்சி பக்கம் இழுக்க பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அண்மைக்காலமாக சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சியினர் சேர்ந்து வருகின்றனர்.
அதேசமயம் கட்சியில் இணையும் புதிய பிரமுகர்களுக்கு உடனடியாக கட்சியில் பதவி வழங்கப்படுவது, காலம் காலமாக பணியாற்றி கட்சியை வளர்த்தவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தற்போது பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய வடசென்னையை சேர்ந்த பிரபல ரவுடியான கல்வெட்டு ரவியும், மற்றொரு ரவுடி சத்யா(எ)சத்தியராஜ் என்பவரும் பாஜகவில் இணைந்துள்ளனர்.
கல்வெட்டு ரவி, சத்தியராஜ் ஆகியோர் நேற்று பாஜக தலைமை அலுவலகத்தில் மாநில பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் முன்னிலையில் கடசியில் இணைந்தனர்.
கட்சியில் இணைந்த கல்வெட்டு ரவி(எ)ரவிசங்கர் மீது கேளம்பாக்கம் கன்னியப்பன் கொலை, தண்டையார்பேட்டை வீனஸ் படுகொலை, ராயபுரம் பிரான்சிஸ் படுகொலை, பொக்கை ரவி கொலை, வண்ணாரப்பேட்டை சண்முகம் படுகொலைகள் என மொத்தம் 6 படுகொலைகள் உள்பட 35 வழக்குகள் உள்ளது. மேலும் 6 முறை குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவர் ஆவார்.
போலீஸாரால் தேடப்பட்டு வந்த இவர் கூட்டாளிகளுடன் நேற்று பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். காவல்துறை பட்டியலில் ஏ ப்ளஸில் இருந்த கல்வெட்டு ரவி என்கவுண்ட்டருக்கு பயந்து தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டதாக பலரும் பேசி வருகின்றனர். எனினும் புதிதாக பலர் பாஜகவில் இணைவதால் தங்களுக்கான பதவிகள் பறிப்போவதாக நீண்டகால தொண்டர்கள் வருத்தத்தில் உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.