காதலால் திருந்தி வாழும் தன்னை போலீஸ் தொல்லை தருவதாகக் கூறி இளைஞர் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை அக்கரைக்குளத்தைச் சேர்ந்த சிங்காரவேலு என்பவர், 17 வயதில் நாகையில் நடந்த கொலை வழக்கில் கைதாகியவர். பின்னர் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் தண்டனை காலம் முடிந்து தற்போது பேக்கரி ஒன்றில் வேலை பார்த்து வரும் அவர் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் திருந்தி வாழும் தன்மீது நாகை நகர போலீசார் பொய் வழக்கு போடுவதாக கூறி சிங்காரவேலு நாகை எஸ்பி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. எஸ்பி அலுவலகம் நுழைவு வாயிலுக்கு தனது மனைவியுடன் வந்த அவர் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி, தலையில் தண்ணீரை ஊற்றி அவரை காப்பாற்றினர். தொடர்ந்து தீக்குளிக்க முயற்சித்த சிங்கார வேலுவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருந்தி வாழும் தனது கணவரை நாகை நகர போலீசார் தொடர்ந்து தொல்லை கொடுப்பதாகவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுத்து திருந்தி வாழ வழிவகை செய்யவேண்டும் என சிங்கார வேலுவின் மனைவி கோரிக்கை வைத்துள்ளார்.