சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி ஓ.பி.சி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-பிரதமருக்கு ராமதாஸ் கடிதம்

இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் ஓ.பி.சி. இட ஒதுக்கீடு
மருத்துவக் கல்விக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் உருவாக்கப்பட்ட நாளில் இருந்து, மாணவர் சேர்க்கையில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு வருகிறது. உயர் நீதிமன்றம் அகில இந்திய தொகுப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதிக்க தமிழ்நாடு அரசு, இந்திய மருத்துவக் கவுன்சில், பல் மருத்துவக் கவுன்சில் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்க வேண்டும் என்று நேற்று ஆணையிட்டுள்ளது.

மத்திய கல்வி நிறுவனங்கள் (மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு) சட்டம் – 2006 நிறைவேற்றப்பட்ட பிறகு 2010-11ம் ஆண்டு முதல் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டும் 27 சதவீத இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது எந்த வகையிலும் நியாயமில்லை.

மத்திய தொகுப்பு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் தனியாக உருவாக்கப்படுவதில்லை. நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ மேற்படிப்பு இடங்களில் 50% இடங்களும், இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15% இடங்களும் ஒதுக்கீடு செய்யப்படுவதன் மூலம்தான் அகில இந்திய ஒதுக்கீட்டு தொகுப்பு உருவாக்கப்படுகிறது.அவையும் அரசு மருத்துவக் கல்லூரி இடங்கள்தான் எனும்போது, அவற்றில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அதுதான் உண்மையான சமூக நீதியாக இருக்கும். அகில இந்திய தொகுப்பில் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டதால் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 11 ஆயிரம் மாணவர்கள் மருத்துவம் பயிலும் வாய்ப்புகளை இழந்து விட்டனர். 35 ஆண்டுகளாக உரிமைகளை இழந்த பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் இனியும் பாதிக்கப்படக்கூடாது. அதை பிரதமர் உறுதி செய்ய வேண்டும். எனவே, சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உடனடியாக இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் உரிய ஆணைகளை பிறப்பிக்கும்படி பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Exit mobile version