சாதியாலும், மதத்தாலும் மக்களை பிளவுபடுத்துகிற உள்நோக்கம் கொண்ட ஊர்வலங்களை, யாத்திரைகளை அமைதிப்பூங்காவாக திகழும் தமிழகம் அனுமதிக்காது என்று அதிமுக கட்சி தெரிவித்துள்ளது
தமிழகத்தில் தடையை மீறி பாஜக கட்சி வேல் யாத்திரையை நடத்த முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், யாத்திரையில் ஈடுபட முயல்பவர்களை போலீஸார் கைது செய்து வருகின்றனர்.இந்நிலையில் வேல் யாத்திரையை முடக்க நினைப்பது எதிர்விளைவுகளை உருவாக்கும் என்று பாஜகவின் மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் கூறி இருந்தார். இதற்கு அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அதிமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சாதியாலும், மதத்தாலும் மக்களை பிளவுபடுத்துகிற உள்நோக்கம் கொண்ட ஊர்வலங்களை, யாத்திரைகளை அமைதிப்பூங்காவாக திகழும் தமிழகம் எப்போதும் அனுமதிக்காது, ஆதரிக்காது என்பதை உரியவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
மனிதத்தை நெறிப் படுத்தவே மதங்களன்றி, வெறிப்படுத்துவதற்கு அல்ல என்பதை இந்திய தேசத்துக்கே உணர்த்துகிற பகுத்தறிவு மண் இந்த திராவிடத்தின் தொட்டிலாம் தமிழகம் என்பதை தொடர்ந்து தமிழ்நாட்டு மக்கள் நிரூபித்து இருக்கிறார்கள்.
ஓம், ஓம் என்று ஒலிக்கும் இந்து மந்திரத்தின் பொருள் அமைதி, நிறைவு கொள் என்பதாகும். அதுபோலவே ஆமென் என்கிற கிறிஸ்தவத்தின் பொருளுடைய மந்திரத்தின் அர்த்தமும் அமைதி கொள், சாந்தமடை என்பதாகும். அதுபோல் இஸ்லாம் என்கிற வார்த்தையும் அமைதி, சமத்துவம் என்பதையே உணர்த்துகிறது.
இப்படி மதங்கள் அனைத்தும் போதிப்பது மானுட சமூகத்தின் அமைதியையும், அன்பையும், சாத்வீகத்தையும்தான். இவ்வாறு இருக்க அந்த மதங்களின் பெயரால் வாக்கு வங்கி அரசியலுக்கு வழி தேடுவதை சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட அதிமுக. அனுமதிக்காது. இதனை வேல் யாத்திரை செல்ல விழைபவர்கள் உணர வேண்டும்.
அமைதி தவழும் தமிழகத்தில் மக்கள் பின்பற்றும் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் உணர்ந்து நடக்க வேண்டும். அது கருப்பர் கூட்டமானாலும் சரி, காவி கொடி பிடிப்பவர்களானாலும் சரி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.