தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் நவம்பர் 16-ம் தேதி முதல் பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை. முகக்கவசம் அணிதல், கையுறைகளை அணிதல், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல் ஆகியவை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சாத்தியமில்லை.
ஒருவருக்கு கொரோனா இருந்தால் கூட, அவர்கள் மூலமாக கல்வி நிறுவனங்களில் உள்ள பெரும்பான்மையினருக்கு நோய் பரவும் ஆபத்து உள்ளது. இத்தகைய ஆபத்தான விளையாட்டில் தமிழக அரசு ஈடுபடக்கூடாது. பள்ளிகளைத் திறந்து ஆபத்தை விலைக்கு வாங்கக் கூடாது.
அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு, கொரோனா அதிகரித்ததால் மீண்டும் மூடப்பட்டது. எனவே, பள்ளி, கல்லூரிகள் திறப்பை தமிழக அரசு கைவிட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.