வைகை எக்ஸ்பிரஸ் ஓட்டுநருக்கு அண்ணா விருது

வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் ஓட்டுநருக்கு வீரதீர செயலுக்கான தமிழக அரசின் அண்ணா விருது கிடைக்கிறது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் ஜே.சுரேஷ். வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் என்ஜின் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஆண்டு நவம்பர் 18-ஆம் தேதி மதுரையிலிருந்து திருச்சி நோக்கி பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது கொடை ரோட்டுக்கும் அம்பாத்துறைக்கும் இடையே தண்டவாளத்தில் பாறைகளும், மணலும் சரிந்து விழுந்து கிடந்தது. இதைக் கண்டவுடன், சுதாரித்து ரயிலை சடாரென நிறுத்தினார்.

சுரேஷின் சமயோசிதத்தால் அச்சமயம் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் மேற்கொண்ட 1500 பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டதுடன், மிகப் பெரும் விபத்தும் தவிர்க்கப்பட்டது. துணிச்சலான இந்த செயலின் காரணமாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பரிந்துரையின் பேரில், வீரதீர செயலுக்கான தமிழக அரசின் அண்ணா விருது லோகோ பைலட் ஜே.சுரேஷ்க்கு வழங்கப்படவுள்ளது. வருகின்ற ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று சென்னை மெரினாவில் நடைபெறும் விழாவில், தமிழக முதல்வர் இந்த விருதை வழங்குகிறார்.

Exit mobile version