எம்.ஜி.ஆர் படத்தை பயன்படுத்துவதில் தவறு இல்லை: வானதி சீனிவாசன் தடாலடி

எம்ஜிஆர் படத்தை நாங்கள் பயன்படுத்துவதில் தவறு இல்லை என்று பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், சென்னையில் இருந்து நேற்று டெல்லி சென்றார். முன்னதாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறும்போது, “தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் தலைமையில் தமிழகம் முழுவதும் வெற்றிவேல் யாத்திரை மூலமாக அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்து செல்ல திட்டமிட்டு இருந்தோம். ஆனால் அதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்துவிட்டது. இது துரதிர்ஷ்டவசமான விஷயமாகும். யாத்திரை செல்ல முயன்ற மாநில தலைவர் உள்பட நிர்வாகிகளை போலீஸார் கைது செய்து உள்ளனர்.

மீண்டும் வேல் யாத்திரையை பாஜக தலைவர் தொடர்வார். இந்த யாத்திரைக்கு மாநில அரசு ஒத்துழைப்பு தரவேண்டும். பாஜக வேல் யாத்திரையை தொடர முதல்வர் அனுமதி வழங்க வேண்டும்.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர். பெண்கள் மத்தியில் பிரபலமானவர். பெண்கள் மீது கருணை, பாசம் கொண்டிருந்தார். அதுபோல்தான் பிரதமர் மோடி, தமிழக பெண்களுக்கு பாதுகாவலராக திட்டங்கள் மூலம் இருக்கிறார். அதை சொல்லத்தான் பாஜக கலைப்பிரிவு எம்.ஜி.ஆர். படத்தை பயன்படுத்தி இருப்பார்கள். எம்.ஜி.ஆர். படத்தை பயன்படுத்துவதில் தவறு இல்லை.

காமராஜர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்றாலும், காமராஜர் வழியில் ஆட்சியை நடத்த வேண்டும் என்ற கருத்தை பா.ஜ.க. பல்வேறு இடங்களில் சொல்லி வருகிறது. நல்ல தலைவர்களை தலையில் தூக்கி கொண்டாடுவதில் தவறு கிடையாது” என்றார்.

Exit mobile version