விமானத்தில் தகவல்களை முதன்முறையாக தெளிவான தமிழில் அறிவித்த விமானி ப்ரியவிக்னேஷ் கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் கொண்டாடப்பட்டு வருகிறார்.
அவர் விமானத்தில் தமிழில் அறிவிக்கும் காணொளியும் வைரலாக சென்றது.
தற்போது அவர் மீண்டும் சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் பொழுது மதுரை ஏர்போர்ட்டில் பணிபுரியும் தமிழர்கள் அவரை நெகிழ வைத்துள்ளனர்.
இதனை அவர் தன் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மதுரக்காரங்க மனச ரொம்ப நெகிழ வச்சுட்டாங்க..
என்னுடைய முதல் தமிழ் அறிவிப்பிற்கு பிறகு நேற்று தான் மதுரைக்கு மீண்டும் விமானத்தை இயக்கினேன். இன்ஜின்களை ஆன் செய்து சென்னை நோக்கி மீண்டும் புறப்பட தயாராகும்முன் க்ரௌண்ட் இன்ஜினியர் இண்ட்டர் காமில் அழைத்தார்..
இன்ஜினியர்:
கேப்டன், நம்ம மதுர ஸ்டாஃப்ஸ் எல்லாம் சேந்து தமிழ் கலாச்சாரப்படி உங்களுக்கு நன்றியும் மரியாதையும் தெரிவிக்கப் போறோம்!
என்று சர்ப்ரைஸ் வைத்து இணைப்பை துண்டித்தார். அடுத்த நொடி விமானத்தின் முன் வரிசையாக நின்றிருந்த அனைவரும் கைகளைக் கூப்பி வணக்கம் சொல்லியும் கைகளையசைத்தும் அன்புடன் விடைகொடுத்தனர்.
ட்யூட்டி முடிந்தும் சிலர் இதற்காக காத்திருந்ததாக அறிந்தேன் !
மதுரக்காரங்க மனச ரொம்ப நெகிழ வச்சுட்டாங்க.
எல்லா புகழும் தமிழுக்கே ! என்று மிகுந்த நெகிழ்ச்சியுடன் ப்ரியவிக்னேஷ் பதிவிட்டுள்ளார்.