சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: 9 போலீசார் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை

சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில், 9 போலீசாருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும், கடந்த ஜூன் மாதம் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 2 பேரும், ஜூன் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காவல் நிலையத்தில் வைத்து போலீசாரால் தாக்கப்பட்டதாலேயே தந்தை – மகன் இருவரும் உயிரிழந்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் உத்தரவின்பேரில், விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கை சி.பி.ஐக்கு மாற்றப்பட்டு சுமார் 3 மாதங்களாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, இந்த வழக்கில் கைதான சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை கொரோனாவால் இறந்த நிலையில், மற்ற 9 பேர் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் அவ்வப்போது சாத்தான்குளத்துக்கும், கோவில்பட்டிக்கும் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இறுதி கட்ட விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், 2 வழக்குகளில், அதிகாரிகள் உள்பட 9 காவல்  அதிகாரிகள் சம்மந்தப்பட்டிருப்பதாக  குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுச்சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது குறிபிடத்தக்கது.

Exit mobile version