செல்போன் பேட்டரி வெடித்ததால் பதற்றம்

சென்னையில் செல்போனை பழுதுபார்க்கும்போது பேட்டரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பதற்றம் ஏற்பட்டது.

சென்னை போரூரில் முஜஃபர் ரஹ்மான் என்பவர் செல்போன் விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் அந்த கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் தனது செல்போனை பழுது நீக்கக் கொடுத்துள்ளார். அந்த கடையில் உள்ள ஊழியர் செல்போனை பழுது பார்க்கத் தொடங்கியுள்ளார். அப்போது செல்போனை பழுதுக்கு கொடுத்த வாடிக்கையாளர் டிஸ்ப்ளேவை சுத்தப்படுத்தும் சானிடைசரை எடுத்து பேட்டரியை சுத்தம் செய்ததாக கூறப்படுகிறது. 

அதில் எதிர்பாராதவிதமாக செல்போன் பேட்டரி வெடித்து சிதறியது. உடனே அங்கிருந்த வாடிக்கையாளர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். அதன்பின் எரிந்துக் கொண்டிருந்த பேட்டரியை கடைக்காரர் மேஜையில் இருந்கு கீழே தள்ளிவிட்டார். இந்த காட்சி சிசிடிவியில் பதிவாகி வெளியாகியுள்ளது.  இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் பகுதியில் குணா பிரதான் என்ற இளைஞர் தூங்கச்செல்வதற்கு முன்னால் தனது தலைப்பகுதிக்கு அருகில் செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு உறங்கியுள்ளார். சூடான செல்போன் திடீரென வெடித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதேபோல் ஹெல்மெட்டுக்குள் வைத்து போன் பேசிக்கொண்டே வாகன் ஓட்டிய போது, போன் வெடித்து சிதறியதில் ஒருவருக்கு கை, காது, தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்தியாவில் நாளொன்றுக்கு சுமார் 20 செல்போன்கள் வெடிப்பதாக தகவல்கள் கூறுகிறது. குறைந்த எம்ஏஹெச் பவர் கொண்ட பேட்டரியில் அதிக வோல்ட் சப்ளை உள்ள சார்ஜர் போடும் போது பேட்டரி பருமன் அடையத் தொடங்குகிறது.

இதனால் சார்ஜ் சரியாக நிக்காமல் அடிக்கடி பேட்டரி லோ ஆகும். அதன் காரணமாக மொபைல் போன் நீண்ட நேரமோ அல்லது இரவு முழுவதுமோ சார்ஜ் போடும் நிலை ஏற்படுகிறது. அப்படி பேட்டரி பருமன் அடைந்துக் கொண்டே வருகையில் ஒருகட்டத்தில் வெடித்து சிதறுகிறது. எனவே மொபைலுக்கு என்று வழங்கப்பட்ட சார்ஜரில் மட்டும் சார்ஜ் போடுதல் என்பது முக்கிமான ஒன்று.

Exit mobile version