தென் தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, குமரிக் கடல் பகுதியில் நிலவும் மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். வட தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை நிலவரம்
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 21 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
18-ஆம் தேதி (இன்று) கேரளா, கர்நாடக கடற்பகுதி, லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
19-ஆம் தேதி லட்சத்தீவு கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மிக பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.