வெளிநாட்டில் இருந்து கடத்தப்படும் தங்கம்..சென்னை விமான நிலையத்திற்கு முதலிடம்

நாட்டிலேயே கடத்தல் தங்கத்தை பிடிப்பதில் சென்னை விமான நிலையத்திற்கு முதலிடத்தில் உள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்கள் தங்கத்தை கடத்தி வருவது என்பது, சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு, சுங்கத்துறை அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கைகள் என அனைத்தையும் மீறி இந்த கடத்தல் என்பது தொடர்கதையாக உள்ளது.

எலெக்ட்ரிக் சாதனங்கள், குடற்பையில் மறைப்பது, பார்சல்கள், துணிகளில் மறைப்பது என வித்தியாசமான முறையிலும், நூதனமாகவும் இந்த கடத்தல் சம்பவம் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், மத்திய நிதி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த அறிக்கையில்,
வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் தங்கம் சென்னை விமான நிலையத்தில் தான் அதிகளவில் பிடிப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த நிதியாண்டில், 858 கோடி ரூபாய் மதிப்புள்ள 2,629 கிலோ கடத்தல் தங்கம் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதில், அதிகபட்சமாக சென்னை விமான நிலையத்தில் மட்டும், 134 கோடி ரூபாய் மதிப்புள்ள 375 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்கத்தை இந்தியாவிற்குள் கடத்தி வருவதில் கேரளா முதலிடத்தில் இருப்பதாகவும், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் விமான நிலையங்களில் 444 கிலோ தங்கம் பிடிபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version