ரத்த தாகத்துடன் ஓநாய்களை போல செயல்படும் அரசு ஊழியர்கள்..உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

இ-பாஸ் விவகாரத்தில் ரத்த தாகம் கொண்ட ஓநாய்களைப் போல, லஞ்சம் பெரும் அரசு ஊழியர்கள் செயல்படுவதாக தமிழக அரசுக்கு சென்னை உயர்நிதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் தனியார் ஆலையில் சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்டுள்ள திருவண்ணாமலையைச் சேர்ந்த 8 முதல் 12-ம் வகுப்பு மாணவிகளை மீட்க கோரி, தமிழ் தேசிய மக்கள் கட்சி சாரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து இ பாஸ் இல்லாமல் திருப்பூர் மாவட்டத்திற்கு மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டதாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், முறையாக விண்ணப்பித்தவர்களால் இ பாஸ் பெற இயலாத நிலையில், இடைத்தரகர்கள் மூலம் 500 முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் பெற்று அதிகாரிகள், இ பாஸ்கள் வழங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக குறிப்பிட்டனர்.

மேலும், கொரோனா பேரிடர் காலத்திலும், ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல லஞ்சம் பெற்று செயல்படும் அரசு ஊழியர்களுக்கு எதிராக, இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், திருப்பூர் தனியார் ஆலையில் இருந்து மீட்கப்பட்ட மாணவிகளை குழந்தைகள் நலக் குழுக்கள் மூலம் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். தொடர்ந்து திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுகின்றனரா என கண்காணிக்க, திடீர் சோதனைகள் நடத்த காவல்துறை, தொழிலாளர் நலத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் நலக்குழுக்களுக்கு உத்தரவிட்டனர்.

Exit mobile version