அரியர் மாணவர்கள் தேர்வு எழுதாமல் எப்படி தேர்ச்சியை எதிர்பார்க்கலாம்? – உயர்நீதிமன்றம்

தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற வேண்டும் என மாணவர்கள் எப்படி எதிர்பார்க்கலாம்? என்று, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் முடப்பட்டுள்ள நிலையில், பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அந்த வகையில், கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்களுக்கும் தேர்வு எழுதாமலேயே ஆல்பாஸ் வழங்கி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இதற்கு, பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தரப்பில் இருந்து ஆதரவு எழுந்தாலும், கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அரசின் அறிவிப்பை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி உள்பட 2 பேர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கின் விசாரணையில், விதிமுறைகளுக்கு மீறி அரியர் மாணவர்களுக்கு ஆல்பாஸ் வழங்கப்பட்டு உள்ளதாக, கடந்த வாரம் ஏஐசிடிஇ பதிலளித்தது.

அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அரியர் மாணவர்கள் ஆல் பாஸ் விவகாரத்தில் ஏஐசிடிஇ விதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என உயர்நீதிமன்றம் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற வேண்டும் என மாணவர்கள் எப்படி எதிர்பார்க்கலாம் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, அரியர் மாணவர்கள் ஆல் பாஸ் விவகாரத்தில் தமிழக அரசும், யுஜிசியும் நவம்பர் 20ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

Exit mobile version