அக்.11-ல் புதிய மெட்ரோ சேவை; மோடி–விஜய் ஒரே மேடையில்!

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தின் பூந்தமல்லி புறவழிச்சாலை–வடபழனி வழித்தடத்தைப் பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 11-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தொடக்க விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யும் பங்கேற்க உள்ளார்.

14.64 கிலோ மீட்டர் புதிய வழித்தடம்

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தின் நான்காவது வழித்தடத்தில், பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் வடபழனி வரையிலான 14.64 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்தப் புதிய சேவை இயக்கப்பட உள்ளது.

பூந்தமல்லி புறவழிச்சாலை, குமணன்சாவடி, காட்டுப்பாக்கம், ஐயப்பன்தாங்கல், போரூர் சந்திப்பு, ஆலப்பாக்கம், காரம்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர், விருகம்பாக்கம் மற்றும் வடபழனி ஆகிய 11 உயர்மட்ட மெட்ரோ நிலையங்கள் இந்த வழித்தடத்தில் இடம்பெற்றுள்ளன.

பயண நேரம் குறையும்

புதிய வழித்தடம் பயன்பாட்டுக்கு வந்ததும், பூந்தமல்லியிலிருந்து வடபழனிக்குச் செல்லும் பயண நேரம் சுமார் 90 நிமிடங்களிலிருந்து 30 நிமிடங்களாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பூந்தமல்லி, போரூர், வளசரவாக்கம் மற்றும் வடபழனி பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலும் குறையும் வாய்ப்புள்ளது.

ஒரே மேடையில் பிரதமர்–முதலமைச்சர்

தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடியும் முதலமைச்சர் விஜய்யும் பங்கேற்று, புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், நிகழ்ச்சி குறித்த விரிவான அதிகாரப்பூர்வ அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை.

Exit mobile version