சென்னையில் மதுக்கடைகளை திறப்பது கொரோனா பரவுவதற்கு வழிவகுக்கும் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னையில் மதுக்கடைகளை திறப்பது கொரோனா பரவுவதற்கே வழிவகுக்கும் என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மார்ச் 24-ந் தேதி முதல் மதுக்கடைகள் மாநிலம் முழுவதும் அடைக்கப்பட்டன. இதையடுத்து, கடந்த மே மாதம் 7-ந் தேதி முதல் சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற பகுதிகளில் மதுபானக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனாலும், நோய் பரவலை கருத்தில்கொண்டு சென்னையில் மதுபானக் கடைகளை திறப்பதற்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னையிலும் நாளை முதல் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது. இதையடுத்து, அதற்கான பணிகள் இன்று மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

சென்னைக்கு வெளியே பிற மாவட்டங்களில் கொரோனா பரவலை ஏற்படுத்தி அதிகப்படுத்தியதில் பெரும்பங்கு டாஸ்மாக் கடைகளுக்கு உண்டு என்று நன்றாகத் தெரிந்தபிறகும், சென்னையில் கடைகளைத் திறப்பது கொரோனா பரவலுக்கான பெருவழி. அதுவும் ஊரடங்கு காலத்தில் திறப்பது, தவறுக்கு மேல் தவறு செய்வதாகும். யார் பாதிக்கப்பட்டால் நமக்கென்ன, வருமானம் வந்தால் சரி என நினைப்பது மனிதாபிமானமற்ற செயல். கொரோனாவின் தீவிரம் குறையாத ஊரடங்குக் காலத்தில் டாஸ்மாக் வேண்டாம். கடைகளைத் திறந்து வைரஸ் உற்பத்தியை மேலும் பெருக்கிட வேண்டாம்.இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version