சென்னை: திருட்டு செல்போன்களுக்கு போதைப்பொருள்..தலைநகரில் புது டீலிங்

சென்னையில் செல்போன்களை திருடி கொடுத்து, அதற்கு மாற்றாக தூக்க மாத்திரைகளை பெற்று இளைஞர்கள் அதனை போதைப்பொருளாக பயன்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2-ம் தேதி பெசன்ட் நகர், ஆவின் பால் பூத் அருகே ராமாபுரத்தைச் சேர்ந்த பாபா என்பவரை வழிமறித்த இளைஞர்கள், கத்திமுனையில் அவரிடம் இருந்து செல்போனை பறித்துச் சென்றுள்ளனர். இதேபோன்று, பெசன்ட் நகர், திருவான்மியூர் குப்பம் பகுதி, அடையாறு இந்திரா நகர் பகுதியிலும், டியோ பைக்கில் வரும் அந்த கும்பல் கத்தியை காட்டி மிரட்டி ஆண்ட்ராய்ட், ஐ-போன் மட்டுமின்றி செயின் பறிப்பிலும் ஈடுபட்டுள்ளது.

இதுதொடர்பான புகார்களின் அடிப்படையில், அடையாறு துணை கமிஷனர் விக்ரமனின் உத்தரவின்பேரில், உதவி கமிஷனர் கௌதமன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு வழிப்பறி நடந்த இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதற்காக அடையாறு, மயிலாப்பூர், ராயப்பேட்டை, சிந்தாரிப்பேட்டை, ஐஸ் ஹவுஸ், ஆகிய பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த 180-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட்ட பைக்கின் பதிவு நம்பர் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில், அது திருட்டு பைக் என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் திருவல்லிகேணி பகுதியைச் சேர்ந்த மொய்னுதீன் (20), கிழக்குக் கடற்கரை சாலை பனையூர் பகுதியைச் சேர்ந்த சாயுப் ஹுசைன், ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், ஐ.டி.ஐயில் படித்து வரும் அந்த 17 வயது சிறுவன் ஐ.டி.ஐ-யில் படித்துவருவதும், அவன் மீது ஏற்கனவே திருவான்மியூரில் கத்திமுனையில் வழிப்பறி செய்த வழக்கு ஒன்று நிலுவையிலுள்ளது தெரிய வந்துள்ளது.

கொரோனா ஊரடங்கில் வீடுகளிலேயே முடங்கிக்கிடந்த இவர்கள், வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட முடிவு செய்திருக்கிறார்கள். அதற்கு 17 வயது சிறுவன் மூளையாகச் செயல்பட்ட, ஐஸ் ஹவுஸ் பகுதியில் டியோ பைக் ஒன்றைத் திருடியிருக்கிறார்கள். பின்னர் ‘PICS ART’ என்ற மொபைல் செயலியின் மூலம் பைக்கிற்கான போலியான ஆர்.சி புக்கை தயாரித்து இருக்கிறார்கள். பின்னர் அந்த பைக்கில் 17 வயது சிறுவனின் போட்டோவை ஓட்டிக்கொண்டு வழிப்பறிச் சம்பவங்களில் மூவரும் ஈடுபட்டுவந்திருக்கிறார்கள்.

திருடிய செல்போன்களை அயனாவரத்தைச் சேர்ந்த தீனதயாளன், அண்ணாநகரைச் சேர்ந்த சாலமன் ஆகியோர் மூலம் விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டு இருந்து உள்ளனர். சாலமன், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பிணவறையில் கடந்த 15 ஆண்டுகளாக வேலை பார்த்துவருகிறார்.

மருத்துவமனையிலிருந்து தூக்க மாத்திரைகளைத் திருடி மொய்னுதீன், சாயுப் ஹுசைன், 17 வயது சிறுவன் ஆகியோருக்குக் கொடுத்திருக்கிறார். அளவுக்கு அதிமாக அந்த மாத்திரைகளைச் சாப்பிடும்போது ஒருவிதமான போதையில் மூன்று பேரும் திளைத்திருக்கிறார்கள். அதற்கு அடிமையான மூவரும் சாலமனிடம் திருடிய செல்போன்களைக் கொடுத்து மாத்திரைகளை வாங்கிவந்திருக்கிறார்கள். இதையடுத்து அவர்களிடமிருந்து ஆறு செல்போன்கள், டூவீலர், அரசு முத்திரையிட்ட 140 தூக்க மாத்திரைகள், தங்க செயின் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Exit mobile version