கவனக்குறைவால் நேர்ந்த விபத்து.. வாட்டர் ஹீட்டரால் இளம்பெண் பலியான பரிதாபம்

ஹீட்டர் தண்ணீர் சூடாகி விட்டதா எனத் தொட்டுப் பார்த்த இளம் பெண், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில், புதுவண்ணாரப்பேட்டை அம்மணி தோட்டம் பகுதியை சேர்ந்த, சக்திவேல் என்பவரது வரது மகள் அனிதா (20). தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கடைக்கு சென்று இருந்த அனிதாவின் தாயார் வீட்டிற்கு திரும்பியபோது, அனிதா வீட்டில் மயங்கிக் கிடந்துள்ளார்.

விசாரணையில், வீட்டில் இருந்த அனிதா குளிப்பதற்காக வாளியில் ஹீட்டர் போட்டுள்ளார். சிறிது நேரம் கழித்து அந்த தண்ணீர் சூடாகி விட்டதா? என்பதை அறிய வாளியில் இருந்த தண்ணீரை தொட்டு பார்த்துள்ளார். அப்போது ஹீட்டரில் இருந்து வந்த மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, அனிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹீட்டர் போன்ற மின்சாரம் தொடர்பான பொருட்களை கையாளும்போது, விழிப்புடன் இருக்க வேண்டும் என பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில்ல், கவனக் குறைவான முறையில் வாட்டர் ஹீட்டர் உபயோகத்தினால் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version