ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பாக இன்று தீர்ப்பு..13 பேரின் உயிர் தியாகத்திற்கு நீதி கிடைக்குமா?

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி, வேதாந்தா குழுமம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது.

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதையடுத்து, கடந்த 2018ம் ஆண்டு பொதுமக்கள் நடத்திய பேரணியில், போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் பிரச்னையாய் வெடிக்க, கடந்த 2018 மே மாதம் 28 -ந் தேதி அந்த ஆலையை மூடி தமிழக அரசு சீல் வைத்தது. மேலும், துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரிக்க அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது.

ஆலையை முடிய தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலின் தலைமையில் குழு அமைத்தது. விசாரணை அறிக்கையில், அந்த ஆலையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டதை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியளித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், ஆலையை திறக்க அனுமதி கோரி ஸ்டெர்லைட் நிர்வாகமும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டதோடு, வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் இல்லை எனவும், ஆலையை திறக்க சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறும் வேதாந்தா நிறுவனத்துக்கு அறிவுறுத்தியது.

அதன்படி, ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து, 39 நாட்களாக நடந்த விசாரணையின் முடிவில் கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி தீர்ப்பினை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில், இந்தவழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு இன்று வழங்க உள்ளது.

Exit mobile version