அறந்தாங்கி அருகே மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முட்டையில் உயிரிழந்த கோழிக்குஞ்சு இருந்ததால் மாணவர்களும், பெற்றோர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
தமிழக அரசின் சார்பில் மாணவர்களுக்கு மதிய உணவுடன் அவித்த முட்டை வழங்கப்படுவது வழக்கம். . கொரோனா காரணமாக பள்ளிகள் இயங்காத நிலையில், பள்ளிகளில் மதிய உணவு உண்ணும் மாணவ, மாணவியருக்கு மாதத்திற்கு 10 முட்டைகள், அரிசி, பருப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்திற்கு மாணவ, மாணவியருக்கு முட்டை வழங்கப்பட்டது. அந்த முட்டையை நாமக்கல்லில் இருந்து ஒப்பந்ததாரர் ஒருவர் வழங்கி வருகிறார்.
இந்த நிலையில் அறந்தாங்கியை அடுத்த ஆயிங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முட்டையை அவித்தபோது அந்த முட்டையின் உள்ளே இறந்த நிலையில் கோழிக்குஞ்சு இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், இதுகுறித்து சத்துணவு மைய பணியாளர்கள் மற்றும் பெற்றோரிடம் தெரிவித்தனர். மேலும் பல முட்டைகளின் ஓட்டை உடைத்தபோது கடுமையாக துர்நாற்றம் வீசியது, கொரோனா தொற்றால் முட்டைகள் தேக்கமடைந்ததால், பள்ளிகளுக்கு தேங்கிய காலாவதியான முட்டையை ஒப்பந்தக்காரர்கள் வழங்கியுள்ளனர் என பெற்றோர்கள் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.