7 பேர் விடுதலை பற்றி பேச தி.மு.க.வுக்கு தகுதியில்லை…முதல்வர் எடப்பாடி தாக்கு

7 பேர் விடுதலை பற்றி பேச தி.மு.க.வுக்கு தகுதியில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் ஆய்வுக்கூட்டம் மற்றும் முடிவுற்ற பணிகள் திறப்பு விழா, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த கூட்டத்தில் பங்கேற்று புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, “முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை குறித்து கடந்த 2000-ம் ஆண்டு தி.மு.க.வின் அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையின் அடிப்படையில் அப்போதிருந்த முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நளினியை தவிர்த்து மற்றவர்களுடைய கோரிக்கையை நிராகரிக்கப்படுகிறது என்று ஏகமனதாக முடிவெடுத்தனர்.
7 பேர் வைத்த கோரிக்கையை நிராகரிக்கப்படுகிறது என்று சொன்னால் அவர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை அமல்படுத்துவது என்பதுதான் பொருள். அமல்படுத்தினால் அவர்களின் நிலை என்னவாகி இருக்கிறோம். அப்படிப்பட்டவர்கள் இன்றைக்கு பேசுவதற்கு எந்த தகுதியும் கிடையாது.


ஜெயலலிதா அம்மா இருக்கும்போது 7 பேர் விடுதலை செய்ய விருப்பம் தெரிவித்தார். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்ததால் என் தலையிலான அமைச்சரவை கூட்டத்தில் 7 பேரும் விடுதலை செய்யலாம் என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைத்தோம். இப்போது போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களின் வேடம் கலைந்து விட்டது. பேரறிவாளனுக்கு பரோல் கூட கொடுக்காமல் தி.மு.க. இருந்தது. நாங்கள் தான் 2 முறை கொடுத்துள்ளோம். சட்டத்துக்கு உட்பட்டு நாங்கள் கொடுத்தோம். எங்களுடைய அரசு கனிவோடு பரிசீலித்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற முழு மனதோடு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்தது அ.தி.மு.க. அரசு.
முன்னாள் அமைச்சர் பொன்முடி எப்படி வேண்டுமென்றாலும் பேசுவார். எலும்பு இல்லாத நாக்கு எப்படி வேண்டும் என்றாலும் பேசுவார் என்பதற்கு அவர் தான்எடுத்துக்காட்டு” என்றார்.

Exit mobile version