சினிமா பாணியில் நடந்த கொள்ளை : கொள்ளையர்கள் பிடிப்பட்டது எப்படி?

ஓசூரில் நடந்த நகைக் கொள்ளையில் 15 மணி நேரத்திலேயே குற்றவாளிகளை பிடித்த காவல்துறைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை துப்பாக்கியுடன் நுழைந்த வடநாட்டு கொள்ளையர்கள் ஏழு பேர்  துப்பாக்கி முனையில் ஊழியர்களை மிரட்டி கட்டிபோட்டு அங்குள்ள லாக்கர்களை திறந்து 25 கிலோ தங்க ஆபரணங்களை கொள்ளையடித்து சென்றனர்.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக பைனான்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் அளித்த புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்த கிருஷ்ணகிரி எஸ்.பி. கங்காதர்  உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று உரிய ஆதாரங்களுடன் ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, உள்ளிட்ட அனைத்து மாநில போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இந்த தகவலை அடுத்து நாக்பூர் வழியாக செல்லும் அனைத்து  சரக்கு வாகனங்கள் மற்றும் பயணிகள் செல்லும் வாகனங்கள் அனைத்தையும் துல்லியமாக சோதனை செய்ய வேண்டும் என தெலங்கானா மாநில போலீசார் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது.

துணை காவல்துறை கண்காணிப்பாளர்கள் பிரகாஷ், விஜயகுமார் ரோகிணி ஆகியோர் தலைமையில் 100 பேர் கொண்ட போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். கொள்ளையர்களிடம் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களோடு  இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசாரும் அதற்கு ஏற்றார்போல் துப்பாக்கிகளுடன் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஜிபிஎஸ் உதவியுடன் கொள்ளையடித்து தப்பிச்சென்ற கொள்ளையர்களின் நடமாட்டத்தை கண்டு பிடித்த

தமிழக போலீசார், அவர்கள் தேசிய நெடுஞ்சாலை எண் 44 வழியாக வடநாட்டை நோக்கி செல்வது பற்றி தெலுங்கானா போலீசாருக்கு தகவல் அளித்தனர். தமிழக போலீசார் அளித்த துள்ளிய தகவலின் அடிப்படையில் காரில் சென்று கொண்டிருந்த கொள்ளையர்களின் ஐந்து பேர் மற்றும் கண்டெய்னர் லாரி ஒன்றில் சென்று கொண்டிருந்த இருவர் உள்பட 7 பேரை  தெலங்கானா மாநில போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 25 கிலோ தங்க ஆபரணங்கள், 96 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், 10 கைத்துப்பாக்கிகள்,  97, துப்பாக்கி தோட்டாக்கள், பயணம் செய்வதற்காக அவர்கள் பயன்படுத்திய கார்,

கண்டெய்னர் லாரி ஆகியவற்றை தெலங்கானா போலீசார் பறிமுதல் செய்தனர். இந்தநிலையில் கொள்ளையர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்கள், துப்பாக்கிகள், செல்போன்கள், தோட்டாக்கள் ஆகிவற்றை காட்சிப்படுத்தி நிருபர்களுடன்  பேசிய ஹைதராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் கொள்ளை நடந்தவுடன் தமிழக போலீசார் உரிய ஆதாரங்களுடன் அனைத்து மாநில போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.  தமிழக போலீசாரின் ஒருங்கிணைப்புடன்  தெலங்கானா மாநில போலீசாரும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி கொள்ளை நடந்த 15 மணி நேரத்தில் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

Exit mobile version