காலை முதலே அதிமுக கட்சிக்குள் ஏற்பட்ட அதிரடி நிகழ்வுகளுக்கு, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போட்ட ஒரு ட்வீட் தான் முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் அதற்கான வேலையில் மும்முரமாக இறங்கியுள்ளன. திமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் ஸ்டாலின் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என இபிஎஸ் – ஓபிஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
சமீபத்தில் இதுகுறித்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, தேர்தலுக்கு பிறகு அடுத்த முதலமைச்சர் யார் என்பதை சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள் என கூற, அந்த கருத்து முதலமைச்சரின் ஆதரவாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதைத்தொடர்ந்து, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்பதை உறுதி செய்து அதற்கான தளம் அமைத்து களம் காண்போம் என கூறிய கருத்து, அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அம்மாவின் ஆசி பெற்ற ஒரே முதலமைச்சர் ஓபிஸ் என தேனியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை ஓட்ட, இபிஎஸ் தரப்பினர் கிழிக்க இருதரப்புக்கும் இடையேயான மோதல் அதிகரித்து ஓபிஎஸ் கடும் அப்செட் ஆகியுள்ளார்.
இந்நிலையில் தான், சுமார் 11 அமைச்சர்கள் இன்று காலை ஓ.பி.எஸ் வீட்டுக்கு வந்து ஆலோசனை நடத்தினர். அப்போது பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, கட்சியின் ஒருங்கிணைப்பாளரா நானா அல்லது அமைச்சர் ராஜேந்திர பாலாஜியா என ஓபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை அவர் அறிவிக்கிறார், வேறு சிலர் பேசுகிறார்கள், அப்படியானால் நான் எதற்கு?” என ஓ.பி.எஸ் காட்டமாக பேசியதாக தெரிகிறது.
தொடர்ந்து, அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை இன்று மாலை 6 மணிக்குள் அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். மாவட்டப் பொறுப்பிலிருந்தும் நீக்க வேண்டும். இல்லையென்றால், நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன் என ஓபிஎஸ் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
என் வேலைகளை அவரே செய்கிறாரென்றால் நான் ஏன் அந்தப் பொறுப்பில் இருக்க வேண்டும், ராஜினாமா செய்துவிட்டு, தொண்டனாகச் செயல்படுகிறேன்” ன்று ஓ.பி.எஸ் சொன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இதே கருத்தை அவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடமும் போனில் தெரிவித்ததாகத் சொல்லப்படுகிறது.
இதையடுத்து, முக்கிய அமைச்சர்கள் நேராக முதலமைச்சர் வீட்டுக்குச் சென்று, ஓ.பி.எஸ் சொன்ன கருத்துக்களைச் சொன்னார்களாம். அதன் தொடர்ச்சியாகவே, இருதரப்பையும் சமாதானப்படுத்தி இந்த பிரச்சனைக்கு தற்போதைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அதிமுக தலைமையின் ஒப்புதல் இல்லாமல் கருத்துகள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். தேர்தல் நெருங்க நெருங்க பல காட்சிகள் மாறலாம் என கூறப்படுகிறது.