திண்டுக்கல் மற்றும் மதுரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்புப் பணிகளை முதல்வர் நாளை ஆய்வு செய்ய உள்ளார். நாளை மறுதினம் நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிகளில் அ.தி.மு.க. அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவ்வப்போது மாவட்ட ஆட்சியர்களுடனும், சிறப்பு மருத்துவ குழுவினருடனும் ஆலோசனை நடத்தி வருகின்றார். மேலும், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். இந்த நிலையில், மதுரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகஸ்டு 6-ஆம் தேதி மதுரை வருகை தர உள்ளார் எனறு ஏற்கனவே அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல் தெரிவித்திருந்தார்.
இதன்படி, மதுரை செல்வதற்காக இன்று இரவு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து கார் மூலமாக சேலம் செல்கிறார். சேலத்தில் இரவு தங்கும் அவர் நாளை காலை கார் மூலமாக திண்டுக்கல் செல்கிறார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்கிறார்.
திண்டுக்கல் ஆட்சியர் மற்றும் பல அதிகாரிகளுடன் கொரோனா தடுப்புப் பணிகள் பற்றி ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அங்கு பல்வேறு அரசுத் திட்டங்களை தொடங்கி வைப்பதோடு, சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், சிறு, குறு, நடுத்தர தொழில் பிரதிநிதிகள், விவசாயிகள், சுய உதவிக் குழுவினர் ஆகியோருடனும் ஆலோசனை நடத்த உள்ளார்.
திண்டுக்கல்லில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு மதுரைக்கு செல்கிறார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் பற்றிய ஆய்வை மேற்கொள்கிறார். பின்னர், விவசாயிகள், குறு, நடுத்தர தொழில் பிரதிநிதிகளின் கோரிக்கைகள் தொடர்பாக அவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இரவில் மதுரையில் அவர் தங்குகிறார்.
மதுரையில் இருந்து 7-ஆம் தேதி காலை புறப்பட்டு நெல்லைக்கு செல்கிறார். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர், தென்காசி மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் அவர் கொரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். பின்னர், பல்வேறு அரசுத் திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதோடு, சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், விவசாயிகள், குறு, நடுத்தர தொழில் பிரதிநிதிகளுடனும் ஆலோசனை நடத்த உள்ளார்.
பின்னர், 7-ஆம் தேதி மாலை நெல்லையில் இருந்து சேலத்துக்கு செல்கிறார். சேலத்தில் 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் தங்கிய பின்னர், 10-ஆம் தேதி சேலத்தில் இருந்து கார் மூலம் மீண்டும் சென்னைக்கு திரும்புகிறார்.