சென்னை மழை பாதிப்பு: ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு!

சென்னை: கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள மழைக்காலக் கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் விஜய் இன்று (அக்டோபர் 18) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

மழைநீர் தேங்கிய பகுதிகளின் நிலவரம், தண்ணீரை வெளியேற்றும் பணிகள் மற்றும் பொதுமக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

மீட்புப் பணிகள் குறித்து ஆலோசனை

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழையால் பல இடங்களில் சாலைகளிலும் தாழ்வான குடியிருப்புப் பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

இந்த நிலையில், மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தைப் பார்வையிட்ட முதலமைச்சர், மழை பாதிப்புகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். மழைநீர் வடிகால் பணிகளின் நிலவரத்தையும் கேட்டறிந்தார்.

பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

பொறுப்பு அமைச்சர்களுக்குப் பணிகள்

முன்னதாக, சென்னையின் 15 மண்டலங்களில் மழை பாதிப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடப் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் சென்னை திரும்பி, அதிகாரிகளுடன் இணைந்து பணிகளைத் துரிதப்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற ஆய்வில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், ராஜ்மோகன், வெங்கடரமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மழைநீரை அகற்றும் பணி

மழைநீர் தேங்கிய பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகளும் பணியாளர்களும் தண்ணீரை வெளியேற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பேரிடர் மீட்புப் படையினரும் சென்னையில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version