கல்வித்துறையில் திமுகவின் முக்கிய திட்டமாகக் கருதப்படும் இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு புதிய சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரிசெய்யும் விதமாக, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, இல்லம் தேடி கல்வி திட்டத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக, ரூ.200 கோடி செலவில், காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை, திருச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நீலகிரி உட்பட 12 மாவட்டங்களில் தன்னார்வலர்களைக் கொண்டு தொடங்கப்பட்டு உள்ளது.
தன்னார்வலர்கள் மூலமாக சுமார் 6 மாத காலம் நாள்தோறும் ஒரு மணி அல்லது ஒன்றரை மணி நேரம் ஆடல், பாடல், நாடகம், பொம்மலாட்டம் போன்றவைகள் கற்பிக்கப்பட்டு குழந்தைகளுக்கு புதுமையான முறையில் பாடம் கற்றுக் கொடுக்க இத்திட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றினால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கற்பித்தல் திறன் பாதித்துள்ள மாணவர்களுக்கு இது பயனுள்ளதாக அமையும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியாக நம்புகிறார். எனவே, இந்தத் திட்டத்தை இன்று மரக்காணத்தில் தொடங்கி வைத்தார்.
அப்போது, அவர் பேசியதாவது :- கல்வி புரட்சியை கொண்டு வந்தது தான் திராவிட இயக்கம். நீதிக்கட்சி ஆட்சி வந்த பிறகுதான் சென்னை மாகாணத்தில் மாணவர்களுக்கு உணவளிக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. காமராஜர், எம்.ஜி.ஆர், கலைஞர் ஆகியோரால் சத்துணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
இல்லம் தேடி கல்வி திட்டத்தில் ஆசிரியர்களுடன் சேர்ந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மாணவர்களுக்கு கற்பிக்க முன்வந்துள்ளனர்.
இல்லம் தேடி கல்வி திட்டம் மாலை நேரத்தையும் பள்ளி நேரமாக மாற்றப்போகிறது. வீடுகளில் இருந்தபடியே கல்வி கற்க வகை செய்கிறது இல்லம் தேடி கல்வி. இல்லம் தேடி கல்வி திட்டத்துக்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சமூகத்தினர் தான் படிக்க வேண்டும், குறிப்பிட்ட சமூகத்தினர் படிக்க கூடாது என்பதை மாற்றியது தான் திராவிட இயக்கம். சத்துணவு திட்டத்தை போல் சிறப்பை பெறப்போகும் திட்டம் தான் இல்லம் தேடி கல்வி திட்டம்,” என பெருமிதத்துடன் முதலமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிலையில், இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தத் திட்டம் ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கையை மறைமுகமாக திணிப்பது போன்ற இருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றன. இது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு முதல் ஆளாக எதிர்ப்பு தெரிவித்துள்ள திராவிடக் கட்சியின் தலைவர் கி.வீரமணி, ஆர்எஸ்எஸ்-ன் கொள்கையை மறைமுகமாக இந்த திட்டம் தமிழகத்தில் திணிப்பதாக இருப்பதாகவும், தேசிய கல்விக் கொள்கை தெரிவிப்பதைத்தான் அப்படியே நடைமுறைப்படுத்துவதாக இந்த இல்லம் தேடி கல்வித் திட்டம் உள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
திராவிடக் கட்சியைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், “இல்லம் தேடி கல்வி திட்டம் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை அரசு பரிசீலிக்க வேண்டும். திட்டத்தை தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், தொண்டர்களும் மேற்கொள்வார்கள் எனில் ஷாகாக்கள் நடத்தும் ‘சங் பரிவார்’ கும்பல் ஊடுருவி பிஞ்சுமனங்களில் மதவெறி எனும் நஞ்சு விதைக்கும் நிலை ஏற்படும்,” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனைத் தொடந்து முதலமைச்சர் ஸ்டாலின் இந்த திட்டத்தை கைவிடுவாரா என கூட்டணிக் கட்சியினர் எதிர்பார்த்து காத்த்ருக்கின்றனர்.