பொங்கல் பரிசு தேர்தல் நேரத்து லஞ்சம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளர்.
2021 தேர்தலுக்காக நேற்று சேலத்தில் பிரச்சாரத்தைத் தொடங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பாளியில் பேசிக்கொண்டிருக்கும்போது பொங்கல் பரிசு குறித்து அறிவித்தார். வரும் ஜனவரி 4ஆம் தேதி முதல் 2.06 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,500 வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
இதனிடையே, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், “சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் சுயநலத்துக்காக முதல்வர் பழனிசாமி பொங்கல் பரிசு அறிவித்துள்ளாரா?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதல்வர், கொரோனா, புயல், கனமழையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவது தவறா? மக்களின் சூழலுக்கேற்ப வழங்குவதைச் சுயநலம் என்று சொல்வது நியாயமல்ல. நடைமுறைப்படுத்த முடியாத கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து திமுக ஏமாற்றுகிறது என்று குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில், சேலத்தில் இன்று (டிசம்பர் 20) செய்தியாளர்களிடம் பேட்டியளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், “டெல்டா பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் நிவாரணத் தொகை அறிவிக்காத நிலையில், பொங்கல் பரிசாக 2,500 ரூபாயை அறிவித்திருக்கிறார். தேர்தலுக்காக அரசின் பணத்தை எடுத்து லஞ்சமாக தனக்கு வாக்களியுங்கள் என்பது போல இருக்கிறது அவரின் அறிவிப்பு” என்றார்.
மேலும், “பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்ய முன்வராமல், அரசின் பணத்தை தவறாக பயன்படுத்தி அரசியல் ஆதாயம் பெறலாம் என்னும் முயற்சி ஒருபோதும் வெற்றிபெறாது” என்றும் கூறியுள்ளார்.