தொடரும் நீட் தேர்வு மரணம் : பயத்தால் 19 வயது மாணவி தற்கொலை

கோவையில்ஆர்.எஸ். புரத்தில் நீட்தேர்வு பயத்தினால், சுபஸ்ரீ என்ற 19 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கோவை ஆர்.எஸ். புரம் வெங்கடசாமி சாலை கிழக்குப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி சுமதி. இந்த தம்பதிக்கு 19 வயதில் சுபஸ்ரீ என்ற மகள் உள்ளார். சுபஸ்ரீ கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவையில் உள்ள தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில், பயிற்சி பெற்று வந்துள்ளார். இவர் ஏற்கெனவே பி.டி.எஸ். படிப்பிற்காக எழுதிய நீட் தேர்வில், தோல்வி அடைந்தார். அதன் பிறகு, மருத்துவப் படிப்பில் சேர மீண்டும் நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட நீட் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது. மேலும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கும் உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. இதனால், இந்த முறையேனும் தேர்ச்சி பெறுவோமா?என்ற குழப்பத்தில் சுபஸ்ரீ  இருந்ததாகக் கூறப்படுகிறது. இதில் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சுபஸ்ரீ, நேற்று மாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து, சுபஸ்ரீயின் தாயார் சுமதி அளித்த புகாரின் பேரில் ஆர்.எஸ். புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.  அங்கு உடலைக் கைப்பற்றிய போலீசார், உடற்கூறு ஆய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2016-ஆம் ஆண்டில் மாணவி அனிதா, 2019-ஆம் ஆண்டில் மோனிஷா, ரித்துஸ்ரீ, வைஷியா ஆகிய மாணவிகளும் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நீட் தேர்வு பயத்தில் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் அனைவரையும் கவலையும், அச்சமும் அடையச் செய்துள்ளது.

Exit mobile version