தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அக்.31 வரை நீட்டிப்பு!!

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக்.31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மே மாதம் 7ஆம் தேதி மு.க ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பதவி ஏற்றது. அப்போது கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றிற்கு 36 ஆயிரத்தை கடந்து பதிவானது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் மே 10ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், கொரோனா தாக்கம் குறையாத நிலையில், முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி மே 24ம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

அதன் பின்னர் பொருளாதாரம் தொடர்பான பொதுமக்களின் நலன் கருதி கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அக்டோபர் 31ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. மேலும், செப்டம்பர் 1ம் தேதி முதல் 9ம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், ஒரு சில மாவட்டங்களில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. எனவே, மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கைகள் எடுக்க அரசு வலியுறுத்தியிருந்தது. பள்ளிகள் திறக்கப்பட்டதில் இருந்து 400 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து ஏற்றம் இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக நேற்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

6 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்தும் சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதன்படி, நவம்பர்1ம் தேதியிலிருந்து தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று பரவாமல் இருக்க பெருமளவில் மக்கள் ஒன்று கூடக்கூடிய நாட்களாகிய வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களும் தொடர்ந்து மூடப்பட்டு இருப்பது தொடர்கிறது.

மேலும், ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள், விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் தொடர்கின்றன. பொதுமக்கள், தங்களது குறைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு, பல்வேறு மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வருகை புரிந்து தலைமைச் செயலகத்தில் தங்களது கோரிக்கை மனுக்களை சமர்ப்பித்து வருகின்றனர், பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் எண்ணத்துடன், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில், திங்கட்கிழமை தோறும், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள், மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் ஆகியவற்றை கொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படுகிறது.

மேலும் முந்தைய ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் 31.10.2021 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும், சமுதாய அரசியல், கலாச்சார நிகழ்வுகள், திருவிழாக்கள், குடமுழுக்கு உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடரும் என அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version