மதுரையில் யூடியூபர் மாரிதாஸ் வீட்டில் சென்னை சைபா் குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
சூா்யா நகர் பகுதியை சோ்ந்தவா் மாரிதாஸ் தனியாா் தொலைக்காட்சி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக விமா்சித்ததாகவும், அந்நிறுவனத்தின் பெயரில் போலியான மின்னஞ்சல் மூலம் தவறான செய்தி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடா்பாக தனியாா் தொலைக்காட்சி நிறுவனம் தரப்பில், சென்னை சைபா் குற்றப்பிரிவில் மாரிதாஸ் மீது புகாா் அளிக்கப்பட்டது. மேலும் சென்னை உயா்நீதிமன்றத்திலும் அவா் மீது வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அவர் யூடியூபில் வீடியோ வெளியிட தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் சென்னை சைபா் குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையா் சரவணகுமாா் தலைமையில் 5 போலீஸாா், மதுரையில் உள்ள மாரிதாஸ் வீட்டில் சனிக்கிழமை சோதனை நடத்தினா். அங்கு மாரிதாஸிடம் விசாரணை நடத்திய போலீசார், அவருடைய கம்ப்யூட்டர், மொபைல்போன் உள்ளிட்டவைகளை சோதனை செய்தனா். சுமாா் 5 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை மற்றும் சோதனை நீடித்தது. அதன் பின்னா் போலீஸாா் சென்னை புறப்பட்டு சென்றனா். இந்த சோதனை குறித்தும், மாரிதாஸிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்தும் போலீஸாா் எந்தவொரு தகவலையும் தெரிவிக்கவில்லை.
இதனிடையே, சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்த வந்தபோது, சோதனை செய்ய உரிய ஆவணங்கள் இருக்கிறதா எனக் கேட்டு போலீஸாருடன் மாரிதாஸ் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். விசாரணைக்கான உத்தரவுகளை அவரிடம் தெரிவித்த போலீஸாா் பின்னா் சோதனையில் ஈடுபட்டனா். மேலும், மாரிதாஸின் லேப்டாப்பை ஒப்படைக்குமாறு போலீஸ் வலியுறுத்தியதாகவும், ஆனால் உரிய பிணை ஆணை இல்லாமல் லேப்டாப்பை வழங்கமாட்டேன் என மாரிதாஸ் பதில் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
மாரிதாஸ் வீட்டில் சோதனை நடைபெறுவது குறித்து தகவலறிந்த மதுரை மாநகா் பாஜக தலைவா் சீனிவாசன் தலைமையில் வழக்கறிஞா்கள் மற்றும் கட்சியினா் வீட்டின் முன் கூடினா். இதையடுத்து போலீஸாா் சோதனையை முடித்துக் கொண்டு, அங்கிருந்து புறப்பட்டனா்.