மன்னார் வளைகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளதால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
மிககனமழைக்கு வாய்ப்பு
மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அதே இடத்தில் நிலைகொண்டுள்ளது. இது அடுத்த 12 மணிநேரத்தில் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நீடிக்கக்கூடும். இதன் காரணமாக, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளையும் கனமழைக்கு வாய்ப்பு
நாளை ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர் நீலகிரி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு மிதமான மழையும், அவ்வப்போது ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
சூறாவளி காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீச வாய்ப்பிருப்பதால், மீனவர்கள் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு அடுத்த 24 மணிநேரத்திற்கும், கேரள கடலோர பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளுக்கு அடுத்த 2 நாட்களுக்குச் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.