வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அல்லது திருத்தம் செய்ய வேண்டுமா?? விவரம் உள்ளே…

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க, திருத்தம் செய்ய அல்லது நீக்க விரும்புவோர், 21.11.2020, 22.11.2020, 12.12.2020 மற்றும் 13.12.2020 ஆகிய 4 நாட்கள் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Vote

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்கவோ, திருத்தம் செய்யவோ அல்லது நீக்கவோ விரும்புவோருக்காக இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்துள்ளது.

தமிழகத்தில் நேற்று முன் தினம் (நவம்பர் 16-ஆம் தேதி) வரைவு வாக்காளர் பட்டியலை, அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வெளியிட்டனர். இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்களும், 18 வயது பூர்த்தி அடைந்தவர்களும், இந்த 4 நாட்கள் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களில் பங்குப்பெற்று பயனடையுமாறு, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, 21.11.2020, 22.11.2020, 12.12.2020 மற்றும் 13.12.2020 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதனைதொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியலை, வரும் ஜனவரி மாதம் 20-ஆம் தேதி வெளியிடவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

மேலும், உங்கள் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறதா மற்றும் உங்கள் விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை https://www.elections.tn.gov.in/ என்ற இணைதள முகவரியை பயன்படுத்தி, உறுதிப்படுத்தியோ அல்லது சரிசெய்தோ கொள்ளலாம்.

வாக்காளர்கள் உரிய படிவங்களை பூர்த்தி செய்து, வருகிற டிசம்பர் மாதம் 15-ஆம் தேதிக்குள் கோட்டாட்சியர் அல்லது வட்டாட்சியர் அலுவலகங்களிலோ அல்லது வாக்குச்சாவடி மைய அலுவலா்களிடமோ வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்றும், ஏதாவது ஒரு முகவரி சான்று மற்றும் வயது சான்று மற்றும் அடையாள சான்றின் நகல் ஒன்றும் வைத்து, உரிய படிவங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.  

முகவரி சான்று

பாஸ்போர்ட், கேஸ் பில், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் கார்டு, தண்ணீர் வரி ரசீது அல்லது ரேஷன் அட்டை.

அடையாள சான்று

பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், வங்கி கணக்கு புத்தகம், 10-ஆம் வகுப்பு சான்றிதழ், மாணவர் அடையாள அட்டை அல்லது ஆதார் கார்டு.

வயது சான்று

10- ஆம் வகுப்பு சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், பான் கார்டு, ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் அல்லது கிசான் கார்டு.

Exit mobile version