கெஞ்சி கேட்கிறேன் மாணவர்கள் இதை செய்யாதீர்கள் – ஸ்டாலின் உருக்கம்

மு.க.ஸ்டாலின் மீதான குட்கா உரிமை மீறல் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு!
கெஞ்சி கேட்கிறேன், மாணவர்கள் யாரும் இனி தற்கொலை முடிவை எடுக்காதீர்கள் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மதுரை மாணவி ஜோதிஸ்ரீதுர்கா நேற்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்னதாகவே, தர்மபுரியை சேர்ந்த ஆதித்யா மற்றும் திருச்செங்கோட்டை சேர்ந்த மோதிலால் ஆகிய நீட் தேர்வுக்கு தயாராகி வந்த இரு மாணவர்கள், தேர்வு அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்தியா முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறும் சூழ்நிலையில், 3 மாணவர்களும் ஒரே நாளில் தற்கொலை செய்து கொண்டது தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதன் காரணமாக, தமிழகத்தில் நீட் தேர்வுக்கான எதிர்ப்புகள் மீண்டும் வலுவடைந்துள்ளது.

இந்நிலையில், கெஞ்சி கேட்கிறேன், மாணவர்கள் யாரும் இனி தற்கொலை முடிவை எடுக்காதீர்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து ஸ்டாலின் கூறுகையில், நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் பணிவான வேண்டுகோள். நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறை செய்தியை கேட்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது. மாணவர்களை கெஞ்சி கேட்கிறேன், இனி யாரும் தற்கொலை முடிவு எடுக்காதீர்கள். பெற்றோர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.
பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து பயப்படுவது நியாயம்தான். ஆனால், அதே பிள்ளைகளுக்கு மன உறுதியையும், தோல்வியை தாங்கக்கூடிய சக்தியையும் சொல்லிக்கொடுங்கள். நீட் தேர்வு முடிவு எப்படி இருந்தாலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தைரியம், தன்னம்பிக்கையை கொடுங்கள், என ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

Exit mobile version