தி.மு.க. கூட்டணிக்குள் இருக்கும் சுமூகமான உறவை சில சக்திகள் கெடுக்க முயற்சிக்கிறது என்று மு.க.ஸ்டாலி்ன் தெரிவித்துள்ளார்.
சென்னை:
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பக்குவப்பட்ட புரிந்துணர்வோடும், பண்பட்ட நேச மனப்பான்மையோடும், தி.மு.க. கூட்டணி மக்களின் ஏகோபித்த ஆதரவுடன், 2021 சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி வெற்றிகரமாக வீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறது.
தி.மு.க. கூட்டணிக்குள்ளே, ஏதாவது திருகு தாளங்களைச் செய்து, சுமூகமான உறவை கெடுத்து, திசைதிருப்பி விடலாம் என்ற சபலத்துடன் சில சக்திகள் இறங்கியிருக்கின்றன.
ஏன் அவசரம்?
ஊசிமுனை துளையேனும் போட்டு, கழகக் கூட்டணியின் கட்டமைப்பை அசைக்க முடியுமா என்று அவர்கள் பார்க்கிறார்கள். அவர்களுடைய ஆசையும் நோக்கமும் பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணிக்கு எந்த வழியிலாவது உதவிட வேண்டும் என்பதுதான்.
200 தொகுதிகளுக்கும் மேல் தி.மு.க. போட்டியிடப் போகிறது என்று விவாதிக்கிறார்கள். ஒருமுறை அல்ல, இரண்டு மூன்று முறை அமர்ந்து பேசி, போட்டியிடப் போகும் தொகுதிகள் இறுதி செய்யப்படுவதுதான் வாடிக்கை. அதற்குள் இவர்கள் ஏன் இவ்வளவு அவசரப் படுகிறார்கள்?
கலகலத்து போவர்:
எதையாவது சொல்லி, வலிவுடனும் பொலிவுடனும் திகழும் கழக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தலாம் என எத்தனிப்பவர்கள் கடைசியில் கலகலத்துப் போவார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.