தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்க அவகாசம் நீட்டிப்பு – உயர்நீதிமன்றம்

தனியார் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான கட்டணம் செலுத்தும் கால அவகாசத்தை, செப்.30 வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும், மாணவர்கள் நலன் கருதி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் நேரடியாக அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி செய்யப்பட்டனர். தொடர்ந்து, கொரோனா முன்னெச்சரிகையாக 2020-2021 ஆம் கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்லைன் வாயிலாக தனியார் பள்ளி மாணவர்களுக்கு எடுக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, கொரோனா ஊரடங்கு காரணமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள் கட்டணம் செலுத்த வற்புறுத்துவதாக பெற்றோர்கள் தரப்பில் இருந்து புகார் எழுந்தது. அதனால் 3 தவணைகளாக கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால் கல்விக் கட்டணம் வசூலிக்க தடை விதித்து அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தனியார் பள்ளிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தனியார் பள்ளிகளில் 40% கல்வி கட்டணத்தை செலுத்தும் கால அவகாசத்தை செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீடித்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், கூடுதல் கட்டணம் வசூலித்த பள்ளிகள் குறித்து அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Exit mobile version