இ-பாஸ் இன்றி அரசு பேருந்துகளில் கொடைக்கானலுக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, சுற்றுலா பயணிகளை கவர பூங்கா நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் வழங்கப்பட்ட தளர்வுகளை தொடர்ந்து, பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டட்டுள்ளது. ஆனாலும் கூட, சுற்றுலா பகுதிகளான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு ஆகிய இடங்களுக்கு செல்ல அந்தந்த மாவட்ட ஆட்சிவர்களின் அனுமதி பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இதனால், இ-பாஸ் இன்றி கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தவர்கள், வெள்ளி நீர் வீழ்ச்சி சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதனால் கொடைக்கானல் வரை வந்தவர்கள் மீண்டும் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது. மோட்டார் சைக்கிளில் கொடைக்கானலுக்கு வருபவர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதே போல அரசு பேருந்துகளில் கொடைக்கானல் வருபவர்களுக்கும் இ-பாஸ் கேட்கப்பட்டதால், உள்ளூர் மக்களும் மிகுந்த அவதிக்கு
ஆளாகினர்.
இந்நிலையில் இன்று முதல் கொடைக்கானலுக்கு அரசு பேருந்தில் வருபவர்களுக்கு இ-பாஸ் அவசியமில்லை என, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி அறிவித்துள்ளார்.
இதனையடுத்து இன்று காலை முதல் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிதுள்ளது. முன்னதாக, கொடைக்கானலில் பிரையண்ட் பூங்கா, செட்டியார்பூங்கா, ரோஜா பூங்காஆகியவை மட்டுமே திறக்கப்பட்டு இருந்தது. சுற்றுலா பயணிகளின் மிக முக்கிய தலமான ஏரி மூடப்பட்டு இருந்தது. இதனால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
தற்போது, மாவட்ட ஆட்சியரின் உத்தரவை தொடர்ந்து வெள்ளி நீர் வீழ்ச்சியில் உள்ள பூங்கா திறக்கப்பட்டுள்ளது. மேலும் பிரையண்ட் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 6 அடி நீளம், 3 அடி அகலம் கொண்ட பூக்களால் உருவாக்கப்பட்ட மயில், தாஜ்மஹால் ஆகியவை சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சாண்டலின் வகை பூக்களும், ஹைரேசின் வகை கீரைகளால் வடிவமைக்கப்பட்ட இந்திய வரைபடம், இதய வடிவம், நட்சத்திர வடிவம் ஆகியவையும் சுற்றுலா பயணிகளை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வர அனுமதி அளித்ததால் இத்தொழிலை நம்பியுள்ள ஓட்டல் உரிமையாளர்கள், வாகன ஓட்டுனர்கள், வழிகாட்டிகள், விடுதி உரிமையாளர்கள் ஆகியோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.