தமிழகத்தில் இ-பாஸ் முறை ரத்து? முதலமைச்சர் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை தொடர்வதா? வேண்டாமா? என்பது குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் என்ற அறிவிப்பால் ஒரே நாளில் லட்ச பேருக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளதாக தகவல்!

கொரோனா பரவல் ஆரம்பகட்டத்தில் இருந்தே இ-பாஸ் நடைமுறை கடுமையாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. அதாவது மார்ச் மாதம் முதல் மாநிலம் விட்டு மாநிலம், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வேண்டும் என்றாலும் இ-பாஸ் இல்லாமல் யாராலும் செல்ல முடியாது. இதனால் அவசர தேவைகளுக்கு கூட செல்ல முடியாமல் பலர் அவதிப்பட்டுவந்தனர். இந்த சூழலில் தான் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல இ-பாஸ் தேவையில்லை எனவும் அதனை மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

ஏற்கனவே தமிழகத்தை பொறுத்தவரை ஆகஸ்ட் 17 முதல் இ-பாஸ் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் அனுமதி வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவிப்பினையடுத்து ஒரே நாளில் லட்ச பேருக்கு இ-பாஸ் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தான் மத்திய அரசின் அறிவிப்பினையடுத்து புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இ-பாஸ் நடைமுறையினை ரத்து செய்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். எனவே இதனைப்போன்று தமிழகத்திலும் இ-பாஸ் முறையினை ரத்து செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த சூழலில் தான் தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையினை தொடரலாமா? அல்லது ரத்து செய்து விடலாமா,? என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இதனையடுத்து இன்று முக்கிய முடிவுகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Exit mobile version