கொரோனா அறிகுறிகள் இருந்தால் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பரிசோதனை

ஆசிரியர்கள், மாணவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று முதல் துவங்கியது.  பள்ளிகளில்  கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாக பின்பற்றுவதுடன், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமெனவும்,  அனைத்து வகுப்பறைகளிலும் கிருமி நாசினி வைக்க வேண்டும், வாரம் ஒருமுறை மருத்துவக் குழுவினர் மாணவர்களின் உடல்நிலையை ஆய்வு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட சுகாதார வழிகாட்டுதல் நெறிமுறைகளை சுகாதரத்துறை ஏற்கனவே வழங்கியுள்ளது.

சென்னை கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்திலும்  பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து இயக்குனர் கண்ணப்பன் கூறும்போது, மாணவர்கள், ஆசிரியர்களுக்கு இருமல், சளி, காய்ச்சல், போன்ற கொரோனா தொற்று அறிகுறிகள் இருக்கிறதா என்பதை மருத்துவர்கள் ஆய்வு செய்கின்றனர். அறிகுறிகள் இருக்கும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஆர்டிபிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு,  அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறினார்.

Exit mobile version