ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் கட்டணம்
தமிழகத்தின் அண்டை மாநிலங்களுக்கும், உள் மாவட்டங்களுக்குள்ளும் தனியார் ஆம்னி பேருந்துகள் இயங்கி வருகின்றன. இந்த ஆம்னி பேருந்துகளில் வாரத்தின் இறுதி மூன்று நாட்கள், பண்டிகை, விடுமுறை காலங்களில் தன்னிச்சையாகவே அதிகப்படியான கட்டணத்தை வசூலிக்கின்றனர். இதுதவிர, சரக்குகளை ஏற்றுவதிலும் விதிகளை மீறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, விதிமீறும் ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோயம்புத்தூர் ‘கன்ஸ்யூமர் வாய்ஸ்’ அமைப்பின் செயலர் லோகு முதல்வரின் தனிப்பிரிவில் புகார் தெரிவித்திருந்தார்.
புகார் எண்
இதற்கு பதில் அளித்து போக்குவரத்து ஆணையர் அலுவலக உதவிச் செயலாளர் அனுப்பியுள்ள பதிலில், ஆம்னி பேருந்துகளில் விழாக் காலங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தல், சரக்குப் போக்குவரத்து வாகனமாக மாற்றுதல் புகார்கள் தொடர்பாக அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் தொடர் தணிக்கை செய்தும், இணக்க கட்டணம் வசூலித்தும், வாகனங்களை சிறைபிடித்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆம்னி பேருந்து கட்டணம், அது தொடர்பாக வேறு ஏதேனும் புகார்கள் இருந்தால் பொதுமக்கள் 18004256151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.