பேஸ்புக்கில் அறிமுகமான வாலிபரை திருச்சிக்கு வரவழைத்து அடித்து, நிர்வாணமாக்கி ஆபாச வீடியோ எடுத்து பணம் பறித்த பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் வெப்டிசைனராக உள்ளவர் வினோத் குமார். 31 வயதான இவருக்கு திருமணமாகி குழந்தை ஒன்று உள்ளது.
சமூக வலைதளங்களில் அதிகம் மூழ்கி கிடப்பதை வழக்கமாக கொண்ட இவருக்கு, கடந்த சில தினங்களுக்கு முன்பு பேஸ்புக் கணக்கில் திருச்சியை சேர்ந்த ஒரு பெண் நட்பு அழைப்பு விடுத்து ஆபாச படம் ஒன்றை அனுப்பி நண்பராக இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். சபலத்திற்கு ஆளான வினோத் குமார் அவரது அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.
இருவரும்
பரஸ்பரம் தங்கள் குறித்த தகவல்களை பரிமாற தொடங்கியுள்ளனர். ஒரு கட்டத்தில் வினோத் குமாரிடம் செல்போன் எண்ணை வாங்கிய நிஷா என்ற அந்த பெண் தனது தேனொழுகும் குரலில் பேசி, வினோத்குமாரை காண வேண்டும் என்ற தனது ஆவலை வெளிப்படுத்தியுள்ளார் நிஷா.
வினோத்குமாரும் பெண்ணின் பேச்சை நம்பி, வீட்டில் வேலை தொடர்பாக செல்வதாக பல்வேறு பொய்களை அவிழ்த்து விட்டு கடந்த 5 ம் தேதி ஹிரோ போல் தயாராகி, கூலிங் கிளாஸ் சகிதம் தனது இருசக்கர வாகனத்தில் புயலென புறப்பட்டு திருச்சி சென்றிருக்கிறார்.
காஜாமலை பகுதியில் பள்ளி ஒன்றின் அருகில் காத்திருந்த நிஷாவுடன், வினோத்குமார் பேசிக் கொண்டிருந்த போது அங்கு மறைந்திருந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென அவரை மடக்கி பிடித்து கத்தியை காட்டி மிரட்டி வினோத்குமார் வைத்திருந்த பர்ஸ், ஸ்மார்ட் போன், ஏடிஎம் கார்டு மற்றும் அவரது இருசக்கர வாகனத்தை பறித்துக்கொண்டுள்ளனர்.
மேலும், புகார் தராமல் இருப்பதற்காக, அவரை மிரட்டி நிர்வாணப்படுத்தி அதனை விடியோவாக பதிவு செய்து கொண்டு அங்கு இருந்து தப்பியுள்ளது அந்த கும்பல்.
நீண்ட ஆலோசனைக்குப் பிறகு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, வினோத்குமார் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கே.கே. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், நிஷாவின் போன் நம்பரை வைத்து அவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் நிஷா அனைத்து விபரங்களையும் கூறவே இதில் மூளையாக செயல்பட்ட முகமது யாசிர், ஆசிக் மற்றும் நிஷா ஆகிய மூவரும் கைது செய்யப்பட்ட நிலையில் அஜீஸ், சித்திக், அன்சாரி ஆகிய 3 பேரும் தலைமறைவாகி விட்டனர்.
கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் தகவல் மற்றும் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.