அரசு பேருந்துகளில் முகக்கவசம் இல்லாமல் பயணிக்கும் பயணிகளுக்கு நடத்துனர்கள் மூலம் ரூ.5-க்கு முகக்கவசம் வழங்கப்படுவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரூர்:
தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கிடையே பேருந்து போக்குவரத்து இயங்கப்படுவதை தொடர்ந்து, கரூர் பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பேருந்துகள் இயங்கப்படுகிறதா என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசு கொரோனா பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாவட்டங்களுக்கிடையே இயக்கப்பட்ட பேருந்துகள், முதலமைச்சரின் ஆணைக்கிணங்க போக்குவரத்துக்கழகத்தின் மூலம் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தமிழகம் முழுவதும் மாவட்டம் கடந்து மாவட்டம் செல்ல பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அனைத்து பேருந்துகளிலும் கைகளை சுத்தம் செய்யும் சானிடைசர் வைக்கப்பட்டுள்ளது.
ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு பேஸ் ஷீல்டு எனப்படும் முகத்தை பாதுகாக்கும் கவசங்கள் மற்றும் கையுறைகள் வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது பேருந்தில் முக கவசம் இல்லாமல் பயணிக்கும் பயணிகளுக்கு நடத்துனர்கள் மூலம் ரூ.5 க்கு முகக்கவசம் வழங்கப்படுகிறது.
பொதுமக்களின் தேவைக்கேற்ப பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவின் அடிப்படையில், போக்குவரத்துத்துறையின் அனைத்து மண்டலங்களிலும் பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்பட இருக்கிறது என்று அவர் கூறினார்.