தொடர்மழையினால் திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளக்காடாகின. தாமிரபரணிகரையோர மக்கள் தவிக்கின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பலத்த மழை பெய்துவருகிறது. இதுவரை இல்லாதஅளவில் மாஞ்சோலை எஸ்டேட்டில் 517 மி.மீ.,மழை பெய்தது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்வதால் அணைகள் கிடுகிடுவென நிரம்பிவிட்டன.ஏற்கனவே நிரம்பியுள்ள மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு, கடனா நதி, ராமநதி அணைகளில் இருந்து வெள்ளநீர் தாமிரபரணி ஆற்றில் வெளியாகிறது.
1992ம் ஆண்டிற்கு பிறகு தாமிரபரணியில் கடந்த சில தினங்களாக செல்லும் வெள்ளநீரால் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி,திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்வார்திருநகரி, ஆத்துார், ஏரல், புன்னக்காயல் உள்ளிட்ட இடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து திருச்செந்துார் செல்லும் சாலையில் புளியங்குளம், கருங்குளம் உள்ளிட்ட இடங்களில் தாமிரபரணி நீர் ரோட்டை கடந்து சென்றதால் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள 200க்கும் மேற்பட்ட உறைகிணறுகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளதால் மோட்டார்கள் இயக்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கும் குடிநீர்சப்ளை பாதிக்கப்பட்டது. அமைச்சர்கள் குழுவினர் வெள்ளம் பாதித்த ஒரு சில இடங்களை பார்வையிட்டனர். தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடிநீர் வீணாக கடலுக்கு செல்கிறது.
துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டை கடந்து தாமிரபணி ஆற்றில் வினாடிக்கு 81 ஆயிரத்து 918 கனஅடி தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது. திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் தாமிரபரணி ஆறு இருபுறமும் நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நெல், வாழைப்பயிர்களை சூழ்ந்துள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் சென்றாலும் திருநெல்வேலியில் மக்கள் குடிநீருக்கு மாநகராட்சி லாரிகளை எதிர்நோக்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.