ஆதரவற்ற முதியவருக்கு இறுதிச்சடங்கு செய்த முன்னாள் எம்.எல்.ஏ.

மயிலாடுதுறையில் ஆதரவற்று இறந்த முதியவருக்கு, சமூக ஆர்வலர்கள் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெக வீரபாண்டியன் இணைந்து இறுதிச் சடங்குகளைச் செய்து, நல்லடக்கம் செய்துள்ளனர்.
Jega Veerapandiyan

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் கடந்த 5-ஆம் தேதியன்று மாலை 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் அடிபட்ட நிலையில் மயங்கிக் கிடந்தார். முதியவரைக் குறித்துத் தகவல் கிடைத்ததும், சமூக ஆர்வலர்கள் அப்பர் சுந்தரம், கிங் பைசல், ஜோதிராஜன் உள்ளிட்டோர் அங்குச் சென்று, தி.மு.க.வைச் சேர்ந்த மயிலாடுதுறை முன்னாள் சட்டபேரவை உறுப்பினர் ஜெக வீரபாண்டியன் ஆலோசனையின்படி, முதியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் சேர்த்து அனைத்து உதவிகளையும் செய்து வந்ததுடன், அவரது உறவினர்களை தேடும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்தார்கள். அதன் வாயிலாக, முதியவரின் பெயர் சங்கர் ராவ் என்பதும், மேட்டூர் கெமிக்கல் காலனியில் வசிப்பவர் என்றும் தெரிய வந்தது. மேலும், அவருக்கு மேட்டூரில் உறவினர்கள் யாரும் இல்லையென்றாலும், முதியவருக்கு புனேவில் ஒரு சகோதரி இருக்கிறார் என்ற தகவலும் தெரியவந்தது.

இதையடுத்து, முதியவரின் சகோதரியை தொடர்பு கொண்டபோது, அவருக்கும் எங்களுக்கும் தற்போது எந்தவித தொடர்பும் இல்லை எனவும், அவரை முற்றிலும் கைவிட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, முதியவருக்கு வேண்டிய அனைத்துத் தேவைகளையும் சமூக ஆர்வலர்களே செய்து கொடுத்து பராமரித்து வந்த நிலையில், நேற்று மாலை முதியவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து, முதியவரின் உடலைப் பெற்றுக் கொண்டு, அவருக்குச் செய்ய வேண்டிய மரியாதைகளைச் செய்து, சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று, அங்குச் செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளை ஜெக வீரபாண்டியன் முன்னின்று செய்தார். அங்கிருந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் காவல்துறையினரும் இணைந்து செய்ய வேண்டிய மற்ற இறுதிச் சடங்குகளையும் முறைப்படி செய்து, முதியவரை அடக்கம் செய்தனர்.

இதுக்குறித்து அங்குள்ளவர்கள் கூறும்போது, “வயதான காலத்தில் முதியவர்களை வீட்டைவிட்டு வெளியேற்றுவது, கண்டும் காணாமல் இருப்பது, உணவில்லாமல் தவிக்க விடுவது, அடிப்படை தேவைகளை செய்யாமல் இருப்பது போன்ற மனிதநேயமற்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் எனவும், பராமரிக்க முடியவில்லை என்றால், அருகில் உள்ள முதியோர் இல்லங்களிலாவது பெரியவர்களை ஒப்படைக்க வேண்டும்” என்றும் மனித நேயத்துடன் உடலை அடக்கம் செய்தவர்கள் கேட்டுக் கொண்டனர்.

உறவினர்கள் இருந்தும் அநாதையாக இறந்த முதியவரின் உடலை முறைப்படி அடக்கம் செய்த சமூக ஆர்வலர்கள், மயிலாடுதுறை காவல்துறை மற்றும் ஜெக வீரபாண்டியன் ஆகியோரின் மனித நேயத்தை பாராட்டி, பொதுமக்கள் பலரும் நன்றி கலந்த வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version