பேஸ்புக், ஓ.எல்.எக்ஸ்-ல் மோசடி : காதலியுடன் இளைஞர் கைது

குறைந்த விலையில் செல்போன் விற்பனை செய்வதாக பேஸ்புக்கில் விளம்பரம் தந்து ஏமாற்றிய நபர் காதலியுடன் கைது செய்யப்பட்டார்.

ஃபேஸ்புக்கில் வந்த விளம்பரத்தில் சுமார் 55000 ரூபாய் மதிப்புள்ள One plus என்ற செல்போனை ரூ. 29500-க்கு விற்பனை செய்வதாக வந்த விளம்பரத்தை பார்த்து ஏமாந்து இருக்கிறார் சென்னை, நந்தனம், ஸ்ரீராம்பேட்டைச் சேர்ந்த சுதாகர். அதிலுள்ள செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட சுதாகரிடம் எதிர்முனையில் பேசிய நபர் பணத்தை தன்னுடைய வங்கி கணக்கில் செலுத்தினால் செல்போனை கொரியர் மூலம் பார்சல் அனுப்புவதாக தெரிவித்துள்ளார். அதனை உண்மையென நம்பிய சுதாகர் Pnonepe மூலம் 29,500 அனுப்பியுள்ளார். ஆனால் விளம்பரம் செய்த நபர் சொன்னபடி செல்போனை கொரியரில் அனுப்பாமல் காலம் தாழ்த்தியதோடு செல்போன் எண்ணையும் பிளாக் செய்துள்ளார்.

ஏமாற்றப்பட்டதை அறிந்த சுதாகர் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரை சைதாப்பேட்டை போலீசார் அடையாறு காவல் மாவட்ட சைபர் குற்றப்பிரிவிற்கு அனுப்பியதன் பேரில், குறைந்த விலைக்கு செல்போன் விற்பதாக வந்த விளம்பரத்தை அளித்து, பொதுமக்களை ஏமாற்றிய குரோம்பேட்டையை சேர்ந்த அரவிந்த்தையும் அவனது காதலி நளினியையும் போலீஸ் கைது செய்து இருக்கிறது. இதையடுத்து அவர்களிடமிருந்து 29,500 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அரவிந்த் மற்றும் நளினி, இருவரும் சேர்ந்து இணையதளத்தில் Facebook, OLX போன்றவற்றில் குறைந்த விலைக்கு செல்போன்களை விற்பதாக மோசடியான விளம்பரத்தை பதிவு செய்து, பொதுமக்களை ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Exit mobile version