தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் ஷாப்பிங் செல்லுபவர்களுக்கு வசதியாக, வரும் 7 நாட்களுக்கு 25 வழித்தடங்களில் 50 கூடுதல் சிறப்பு மாநகர பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதையடுத்து, கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இதனையடுத்து, தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், பொருட்கள் வாங்க செல்லும் மக்களின் வசதிக்காக, வார இறுதி நாட்களில், 7 நாட்களுக்கு 25 வழித்தடங்களில் கூடுதலாக 50 சிறப்பு மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, தியாகராய நகர், புரசைவாக்கம் மற்றும் வள்ளலார் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் சென்று வருவதற்கு வசதியாக பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. அதன்படி வரும் 24, 25, 26 மற்றும் 31 தேதிகளிலும் மற்றும் நவம்பர் மாதம் 1, 7, 8 தேதிகள், ஆகிய 7 நாட்களுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளது. மக்கள் சிறப்பு பேருந்துகளை எளிதாக அடையாளம் காணும் வகையில், தீபாவளி ஷாப்பிங் ஸ்பெஷல் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும் என தெரிவித்துள்ளனர்.