நீட் கலந்தாய்வை தவறவிட்ட அரசுப்பள்ளி மாணவி…

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு தேதி தெரியாமல், நீட் கலந்தாய்வை மாணவி தவறவிட்டுள்ளார். அரசு அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பளிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
NEET Kowsalya

சிவகங்கை மாவட்டத்தின் கடைக்கோடி கிராமம் குருந்தங்குளம். விவசாய கூலி தொழிலாளர்கள் சக்திவேல், சந்திரா தம்பதியின் மூத்த மகள் கவுசல்யா. இவர் பழையனூர் அரசு பள்ளியில் 2015-ல் பத்தாம் வகுப்பு தேர்வில் 489 மதிப்பெண், 2017-ல் பிளஸ் 2 தேர்வில் ஆயிரத்து 111 மதிப்பெண் எடுத்தார். மருத்துவ படிப்பு படிக்க விரும்பினார். 

நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதையடுத்து, பி.எஸ்சி வேதியியல் பாடப்பிரிவில் சேர்ந்து முதல் ரேங்க் எடுத்து தேர்ச்சி அடைந்தார். நீட் தேர்வு பயிற்சி செல்ல பொருளாதார வசதி இன்மையால் வீட்டில் இருந்து பாடப் புத்தங்கள் மூலம் நீட் தேரிவிற்கு தன்னை முழுமையாக தயார் படுத்திக்கொண்டார். இந்தாண்டு நீட் தேர்வு எழுதி  வென்றார். குடும்ப ஏழ்மை சூழ்நிலையால் அலைபேசி உள்ளிட்ட எந்த வசதியும் இன்மையால், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு தேதி (நவ.18) தெரியாமல் அதில்  பங்கேற்க முடியாமல் போனது.

தன்னைவிட குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவியர் சிலருக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம்  கிடைத்த தகவலறிந்தார். இதன் பிறகே, நவ.18-ல் நடந்த 7.5 % இட ஒதுக்கீடு நீட் கலந்தாய்வில் பங்கேற்க முடியாமல் போனது கவுசல்யாவுக்கு தெரிய வந்தது. கல்வியறிவு இல்லா பெற்றோரின் உதவி இல்லாத கவுசல்யாவிற்குக்கு, அவரது உறவினர் உதவி செய்து வருகிறார். கலந்தாய்வை தவற விட்ட மாணவி கவுசல்யாவுக்கு, அரசு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version