பிச்சைக்கு சமமாக லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் – உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டம்

அரசு ஊழியர்கள், ஊதியத்தையும் கடந்து லஞ்சம் வாங்குவது என்பது, பிச்சை எடுப்பதற்கு சமம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கடுமையாக விமர்சித்துள்ளது.

அரசு அலுவலகங்களில் கையூட்டு இன்றி பணிகள் எதுவும் நடைபெறாது என்பது சாமானிய மக்களின் நெடுநாள் குற்றச்சாட்டாக உள்ளது. வாழ்வில் லாபம் என்பதை கண்டிராத விவசாயிகளுக்கும் அதே நிலை தான் கணப்படுகிறது.

கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல்மூட்டை ஒன்றுக்கு, 40 ரூபாய் வரை அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது. இது தொடர்பான மனு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது, அரசு ஊழியர்கள் ஊதியத்தையும் கடந்து லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம். கொள்முதல் நிலையங்களில் ஒரு நெல்மணி முளைத்து வீண் போனாலும், அதற்கு காரணமான அதிகாரியிடம் பணத்தை வசூலிக்க வேண்டும். ஒரு நெல்மணி முளைத்து வீணானாலும், அதற்கான பணத்தை வசூலிக்க வேண்டும். அப்போது தான் நெல்மணிகள் வீணாவது தடுக்கப்படும் என நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.

மேலும், நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என விவசாயிகள் போராடுவதை பார்க்க முடிகிறது. விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.

நெல் கொள்முதல் செய்வதற்கு மாற்று ஏற்பாடுகளை அரசு விரைந்து முடிவெடுப்பது அவசியம். விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மற்றும் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரும் நெல்மூட்டைகளை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுதொடர்பாக விளக்கமளிக்கும்படி, நுகர்பொருள் வாணிப கழக இயக்குநருக்கு உத்தரவிட்டனர்.

Exit mobile version